Friday, May 16, 2008

உனதும் எனதும் உறவும் பிரிவும் பற்றிய பாடல்


எனக்கு மிகவும் பிடித்துப்போன நிலையில்
நீ உன் பெருங்கவிதையினை வாசித்தாய்.
அன்றைய பொழுதின் வேகத்தினையும் விட உன் கவிதைச் சொற்களின்
கூர்மையாக்கப்பட்ட வேகம் மிகவும் வலுத்திருந்தது.

உன் பெருங்கவிதையின் ஒவ்வொரு உச்சரிப்பின் பின்னும்
நான் அதற்கென அரசியல் கண்டுபிடித்தேன்.
உன் பெருங்கவிதைக்குள்ளே உணர்ச்சி, சுயம், ஆழம், தூய்மையென
அனைத்து மனிதமும் நிறைவாய் இருந்தது.
நீ மிக உயர்ந்த இடங்களில் எழுந்து நின்று
~என் கவிதைகள் நமக்கே| யென உரத்த குரலில்
என்னை அரவணைத்துக்கொண்டு முழங்கினாய்.

உன் கவிதை எனக்கும் இனித்தது
உன் கவிதை எனக்கும் உறைத்தது
உன் கவிதை எனக்கும் உயிரானது
உன் கவிதை எனக்கும் பலமானது
உன் கவிதை எனக்கும் வலுத்தது
உன் கவிதை எனக்கும் எனக்கானது
உன் கவிதை என்னையும் எழுப்பியது

நீ உன் கவிதையில் அன்பை விதைத்து நாமொன்று என்றாய்
நமது இனங்களின் தொடக்கங்களை இணைத்தாய்
நமது குடிப்பரம்பலை நிறுவினாய்
நாம் இறைவனால் இணைக்கப்பட்டோமென்றாய்
நம்மை பிரித்துவிட்டார்களென்றாய்
நாம் இணைந்து கொள்வோமென்றாய்
நமக்கென நிலம் வேண்டுமென்றாய்
நமக்கென புதிய வரலாற்றினை எழுதினாய்.

நான் உன் கவிதையினை புரிந்துகொண்டேன்
அப்போதெல்லாம் நீயும் என்னை அரவணைத்தாய்
உன்னுடன் உறவாடுவது என்னை எனக்குப்பிடித்ததினை விட பிடித்துப்போனது

மகத்தான ஆரம்பங்களுடன் நம்பயணம் தொடங்கிற்று.
உன் கவிதைக்குள் என்னையறியாமலே நான் புதைக்கப்பட்டேன்.
நீயும் உன் கவிதையும் எனக்கும் என நீ கூறியதால்
உன் பெருங்கவிதையெனக்கு பலமென நம்பி
இறுதியில் உனக்குள்ளும் உன் கவிதைக்குள்ளும் சரணாகதியானேன்.

நீ எழுதிய வரலாற்றில் காலம் ஓடியது
உன் பெருநில கவிதையின் சொற்கள் மாறின
உன் நிகழ்ச்சி நிரல்கள் எங்கோ நிர்ணயிக்கப்பட்டன
உனக்குள் இருந்த ஆரம்பங்கள் தொலைந்தன.
எனக்கும் உனக்குமான காதலால்

நீ பலமடைந்த பொழுதுகளை மறந்தாய்
திடிரென என்னையும் நம் காதலையும் நிராகரித்தாய்
உன்னையே நம்பிய பாவத்திற்காய்
முஸல்லாவிலே பலிக்கடாவாக்கினாய்
எனது அறிவகங்களின் கற்பை அழித்தாய்
பாங்கிற்காய் உயர்ந்த குரல்களை அறுத்தாய்
நிர்வாணமாக்கி என் நிலத்திலிருந்தே துரத்தி
நடுத்தெருவிலும் அடர்ந்த காட்டிலும் விரட்டி விரட்டியடித்தாய்.

உன் அன்பின் பின்னரசியல்
இவ்வளவு வக்கிரமென நான் நம்பியிருக்கவில்லை.
நீயடித்த அடியில் என் காதல் போதை கலங்கியது
நானும் நீயும் வேறென அறிந்தேன்.

தேடிப்பார்த்த போது
உனக்குமெனக்கும் வெகு தூரம்.
நீ காட்டிய காதல் பொய்
நீ கூறிய உலகம் பச்சப்பொய்
நீ நிறுவிய அனைத்தும் பொய்
நீயெழுதிய வரலாற்றில் பொய் மாத்திரமே உண்மை.

என் வலிகள் என்னைத்தேடியலைந்தன...

நீ வேறு நான் வேறு
எனதும் உனதும் மொழிகள் வேறு
எனதும் உனதும் பொழுதுகள் வேறு
எனதும் உனதும் சூரியனும் சந்திரனும் வேறு
எனதும் உனதும் நாட்களும் நிமிடங்களும் வேறு
எனதும் உனதும் கவிதைகளும் பாடல்களும் வேறு
எனதும் உனதும் மொத்தமும் வேறு வேறு.
நீ விரட்டும் போது உனக்கு நான் வேறு
அதை நான் கூறும் போது
உன் வன்முறையெனக்கு மீது.

நிச்சயமாக,
எனதும் உனதும் அனைத்தும் வேறு
நம் நன்றிகள் கூட வேறு
நமது கவிதையும் பாடலும் வேறு வேறு என்பது போல.

- பெருவெளி இதழ் 05

No comments:

எனது வலைத்தளமும் நானும்

My photo
Addalaichenai, South East, Sri Lanka
இந்த வலைத்தளங்களினூடாய் பொதுப்பார்வைக்கு எனது செயற்பாடுகளையும் இணைத்துக் கொள்கிறேன். அதி வேகமான வாழ்கைக்குள்ளும் எனது உலகினுள் வருகை தந்தமைக்கு ஜஸாகல்லாஹ் என்பதுடன் வரவேற்கிறேன். தொடர்ந்து உரையாடுவோம்..