Monday, June 9, 2008

இரண்டு தடவைகள் வாழ்கிறாய்

















அனைத்து சலனங்களினையும் அடக்கி
என் மூச்சைத் திருடி
நீ அதிர்வுகளோடு எழுந்து போனாய்.

இப்படியிருக்காது என்ற என் ஆசைகள் மீது
உன் ஆளுமையும் அதிரவைக்கும் விம்பல்களும்
உருக்குலைய வைத்து
என்னை சாகடித்துக் கொண்டே இருக்கிறது.

உன்னை முதலினைப்படுத்தி
என்னை விட உன் மகிழ்விற்கே இவையெல்லாமென
பல கோடி தடவை கெஞ்சினேன்.

உன் அசட்டுக் காதுகளும்
உன்னிலைகளே அனைத்தும் என்ற கனவுகள்
என் உடலின் இரு அந்தங்களிலும்
மீசான் கட்டைகளை செருகி விட்டது.

எனக்கேயான எனது அனைத்தினையும் மறுத்தாய்.
உன் பிடிவாதங்கள் நிறைந்த உலகில்
நீ இட்டுள்ள உறுதியான உனது நிலைகளில்
என்னையும் ஓடவிட்டு
நீ வாழ்வதை பார்த்துக் கொண்டிருக்கிறாய்.

நீ உலகில்
இரண்டு தடவைகள் வாழ்கிறாய்.

09.06.2008

கொலைகளின் தேசத்தில் பிறந்தேன்.


எனது இரவுகளை
தூக்கமென்ற அடர்ந்த உலகினுள் புதைக்காமலும்
எனது பகல்களை
சோம்பலேறிப்போன வேலைத்தளத்தினுள்
அடமானம் வைக்காமலும்
எனது இன்றைய நாட்கள் நகர்கின்றன.

கரை தட்டும் கடலின் ரகசியம் போல்
ஒவ்வொரு நிமிடமும்
புதிர்களும் வினாக்களும் நிறம்பிய உலகமும்,
என்னில் விழுந்து விழுந்து எழும்புகிறது.

கனவுகளின் காலைகளை
இராட்சத விலங்கொன்று விழுங்கிற்று.
சமாதானம் பேசச்சென்று
வெட்டுண்டு விட்டதன் செய்திகளே
காலை அழைப்பாக தொலைபேசியில்.

உதடுகள் இரண்டினையும் இறுக மடக்கி
விரல்களைப் பொத்தி கைக்குள் வைத்து
உன்னைக் கேட்கிறேன்.

கொலைகளின் தேசத்தில் ஏன் பிறப்பாக்கினாய்.

07.06.2008

நாட்கள் மெலிந்தன

அனைவரும் போல நீயுமானாய்.


பகல்களை சூரியனிடமிருந்து பிடுங்கி

அனைத்தினையும் இருளாக்கிடும் விடயமாய்
நான் இதை நினைத்திருக்கவில்லை.


என்னிலைகளை புரிந்து கொண்டு
காலமெல்லாம் நீ பேசிய அனைத்தையும்
மறந்து
உன்னிலை காப்பிற்காய்
துக்கியெறிந்து முகம் மாற்றி
நீண்ட வெளியில் எதுவுமற்று என்னை
உன்னால் நிரப்பிவிட்டு சென்றாய்.

இருப்பினும்,
நீயும் உன் நினைவுகளும்
குளிர் காலத்து உன் சிறகுகளும் போதும்.
என்னை முந்தியடித்து
உன்னோடு எனக்குள் வாழ்வேன்.

நாட்கள் மெலிந்து கிடக்கின்றன.

01.06.2008.

காறித் துப்பி எழும்புவோம்


அறிவாக நினைத்ததெல்லாம்
மையத்துக்களை விருந்தாகத் தந்தது.
என்னை நிறப்பி ஒட்டி சீர்செய்யும் உன்
அனைத்து கைங்காரியங்களும் சிதறிப்போயின.

உன் இதுவரைக்குமான ஜீவிதத்தில்
நீ கேட்டதெல்லாம்
உன்னை அதிகாரப்படுத்தியே.


உன்னை ஒதுக்கிவைத்து விட்டு
எந்த அறிவினையும் நாங்கள் பெற்றிடாத படி
நீ
எங்களில் உன்னை
உறுதியாய் வார்த்திருக்கிறாய்.


நாங்களிழந்த கால்களினாலே
உன்னை எட்டியுதைத்து
உன் மொத்த இருப்பின் மீதும்
காறித் துப்பி
நாங்கள் திடமாய் எழும்பிவோம்.


என் தேசத்தின் அனைத்திற்குமாய்
எங்களிலிருந்து நாங்கள் எழும்புவோம்.

30.05.2008

எனது வலைத்தளமும் நானும்

My photo
Addalaichenai, South East, Sri Lanka
இந்த வலைத்தளங்களினூடாய் பொதுப்பார்வைக்கு எனது செயற்பாடுகளையும் இணைத்துக் கொள்கிறேன். அதி வேகமான வாழ்கைக்குள்ளும் எனது உலகினுள் வருகை தந்தமைக்கு ஜஸாகல்லாஹ் என்பதுடன் வரவேற்கிறேன். தொடர்ந்து உரையாடுவோம்..